தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் கோயிலில் பரதநாட்டிய கலைஞருக்கு அனுமதி மறுப்பு? புகாரும்.. விளக்கமும்

ஸ்ரீரங்கம் கோயிலில் பரதநாட்டிய கலைஞருக்கு அனுமதி மறுப்பு? புகாரும்.. விளக்கமும்

Veeramani

திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் மதத்தின் அடிப்படையில் அனுமதிக்காமல் தடுத்ததால் பெரும் அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது என்று பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த ஜாகீர் உசேன், “ ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் அனுமதிக்காமல் தடுத்ததால் பெரும் அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது. நான் 8 வயதில் இருந்தே திருச்சி உள்ளிட்ட பல கோயிலுக்கு சென்று இருக்கிறேன். பரத நாட்டியம் உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறேன். ஆனால் முதல் முறை மதத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தியது, மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த நபர் ( ரங்கராஜன்)  திட்டமிட்டு இதுபோன்று செய்து இருக்கிறார். ஆனால் நிர்வாகிகள் யாரும் என்னை தடுக்கவில்லை; முறையாக புகார் அளித்து இருக்கிறேன். மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். இவற்றை சீர்குலைக்கும் நபர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடவுளை நம்புகிறவர்கள் யாராக இருந்தாலும் கோயிலுக்கு அனுப்பலாம். இதுவரை அப்படித் தான் நடந்து இருக்கிறது. மத நல்லிணக்கம் பாதுகாப்புடன் இருப்பதால் தான் கொரோனா காலம், மழை வெள்ளத்தில் கூட இஸ்லாமியர்கள் உதவினார்கள். திருவல்லிக்கேணி கோயிலுக்கு கூட சென்றனர்” எனத் தெரிவித்தார்

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, “நேற்று ஜாகீர் உசேன் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவத்திற்கும் கோவில் நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கோயில் பணியாளர்கள் அவரை தடுக்கவும் இல்லை. ரங்கராஜன் நரசிம்மனுக்கும் ஜாகீர் உசேனுக்கும் நடந்த வாக்குவாதம் தொடர்பாக விசாரித்து வருகிறோம்” என்றார்.