மதுரையில் பணி நிறுத்தம் செய்யப்பட்ட தங்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என ஆயுஷ் மருத்துவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 11 மாதங்களாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த தங்களை திடீரென பணி நிறுத்தம் செய்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். முன்களப்பணியாளர்கள் எந்த விதத்திலும் பணியில் நீக்கம் செய்யப்படமாட்டார்கள் என முதலமைச்சர் கூறி வந்த நிலையில் அரசின் திடீர் அறிவிப்பால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக ஆயுஷ் மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மதுரை மண்டல சுகாதாரத்துறை மற்றும் ஆட்சியருடன், மருத்துவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. மதுரை மாவட்டத்தில் கொரோனா மருத்துவமனையில் பணிபுரிய ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அனுபவம் வாய்ந்த ஆயுஷ் மருத்துவர்களின் பணி நிறுத்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.