பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆட்டோவிற்கு மலர்வளையம் வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்கின்றன. அந்த வகையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை தற்போது வரலாறு காணத அளவில் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளதால், கடந்த சில நாட்களாக எரிபொருள் விலையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெட்ரோல்,டீசல் விலை உயர்வினால் ஏழை எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் புதுச்சேரியில் இந்திராகாந்தி சிலை அருகே ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆட்டோக்களுக்கு மலர் வளையம் வைத்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விலை உயர்வைத் திரும்ப பெறாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.