தமிழ்நாடு

நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!

நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!

Rasus

காஞ்சிபுரத்தில் 48 நாட்கள் நடைபெற்ற அத்திவரதர் வைபவம் நிறைவுபெற்றது. இதையடுத்து நள்ளிரவில் அத்திவரதரின் சிலை அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்பட்டது.

வைபவத்தின் 48-ஆவது நாளில் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஆகம விதிகள்படி அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதரை வைப்பதற்கான பணிகள் நடைபெற்றன. இதனையடுத்து நள்ளிரவு 12 மணியளவில் வசந்த மண்டபத்தில் இருந்து அத்திவரதர் சிலை கொண்டுச்செல்லப்பட்டது.

பின்னர் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் அத்திவரதர் சிலை சயன கோலத்தில் வைக்கப்பட்டது. அதன் அருகில் நாக சிலைகளும் வைக்கப்பட்டன. அடுத்த 40 ஆண்டுகளுக்கு அத்திவரதர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மூலிகைகள் கலந்த தைலக்காப்பு பூசப்பட்டது. அத்திவரதர் வைபவம் நடத்தியதை குறிக்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் பொறித்த கல்வெட்டு அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அத்திவரதர் வைபவம் முடிந்ததும் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அத்திவரதர் சிலை வைக்கப்பட்ட பின்னர் ஐதீகம் படி மழை பெய்ததாக அப்பகுதியினர் நம்பினர். இனி, 2059ஆம் ஆண்டுதான் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு மக்களுக்கு தரிசனம் தருவார்.