தூத்துக்குடியில் பிடிபட்ட மாலத்தீவு முன்னாள் துணை அதிபரிடம் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாலத்தீவில் இருந்து தப்பி கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அந்நாட்டு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப்பிடம் இந்தி ய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 11ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் ஒன்று சென்றது. அதில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 8 பேர் என மொத்தம் 9 பேர் சென்றனர். சரக்கை இறக்கிவிட்டு மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்குத் திரும்பிய கப்பலில் பத்தாவதாக ஒரு நபர் வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து கப்பலில் இருந்த தூத்துக்குடியைச் சேர்ந்தவர், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் பேரில் இந்திய அதிகாரிகள் நடுக்கடலில் இருந்த கப்பலுக்குச் சென்று விசாரணை நடத்தினர். கப்பலில் இருந்தவர், மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் என்பதும் எந்தவித ஆவணமும் இல்லாமல் இருந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. கப்பலில் இருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் அனுமதியின்றி அதீப்பை அழைத்து வந்ததாகத் தெரிகிறது. அவரிடம் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.