தமிழ்நாடு

தோண்டத் தோண்டக் கிடைத்த தோட்டாக்கள்: ராமேஸ்வரத்தில் சிக்கிய ஆயுத குவியல்

தோண்டத் தோண்டக் கிடைத்த தோட்டாக்கள்: ராமேஸ்வரத்தில் சிக்கிய ஆயுத குவியல்

webteam

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வீட்டின் கழிவு நீர்த்தொட்டியிலிருந்து பயங்கர ஆயுதங்களுடன்‌ கூடிய 54 இரும்புப்பெட்டிகள் கிடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் தங்கச்சிமடம் அந்தோணியார் கோவில் கடற்கரை பகுதியை சேர்ந்தவர் எடிசன். இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டிக்காக குழித்தோண்டியுள்ளனர். அப்போது இரண்டு இரும்புப்பெட்டிகள் தென்பட்டது. இதுபுதையலாக இருக்கலாம் என கருதிய எடிசன் இதுகுறித்து தங்கச்சிமடம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் அதனை தோண்டி மேலே கொண்டுவந்தனர். அதனை திறந்து பார்த்தப்போது அதனுள்  ஏ.கே.47 உள்ளிட்ட நவீன ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் , ராக்கெட் லாஞ்சர்கள், வெடிகுண்டுகள் போன்றவை இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அப்பகுதியில் ஆழமாக தோண்டினர்.

தோண்ட தோண்ட தொடர்ச்சியாக இரும்புப்பெட்டிகள் கிடைத்தவாறே இருந்தன. மொத்தம் 54 பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் பல்வேறு விதமான ஆயுதங்கள் துருப்பிடித்த நிலையில் இருந்தன. இதற்கிடையில் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்‌டோர் நிகழ்விடத்திற்கு விரைந்து பணிகளை நேரில் பார்வையிட்டனர். 

இதுகுறித்து பேசிய ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா , இப்பகுதியில் கைப்பற்றப்பட்ட அனைத்தும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள். இவை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்டு இருக்கலாம். கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் தடயவியல் துறை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னரே முழுவிபரமும் தெரியவரும் என்றார்.ஆயுதங்கள் கைப்பற்ற இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் தொடர்ந்து தோண்டும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

இலங்கையில் ராணுவத்துக்கும்  - விடுதலைப்புலிகளுக்கும் இடையே 1983-ல் இருந்து போர் நடந்து வந்தது.  கடந்த 1986 ஆம் ஆண்டு இந்தியாவில் பயிற்சி பெற்ற இலங்கையை சோந்த தமிழ் குழுக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டது. அந்த கால கட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் பயிற்சி பெற்றவர்கள் தங்கள் பயிற்சியின் போது பயன்படுத்திய ஆயுதங்களை இலங்கைக்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து, பயிற்சி அளிக்கப்பட்ட இடங்களில் ஆயுதங்களை புதைத்து விட்டு சென்றதாக தெரிகிறது.