தமிழ்நாடு

அரியலூர்: நள்ளிரவில் திடீரென ஒலித்த வங்கி அலாரம் - கொள்ளை என நினைத்து குவிந்த மக்கள்

அரியலூர்: நள்ளிரவில் திடீரென ஒலித்த வங்கி அலாரம் - கொள்ளை என நினைத்து குவிந்த மக்கள்

kaleelrahman

அரியலூரில் நள்ளிரவில்  வங்கியின் அலாரம் ஒலித்ததால் -  மக்கள் வங்கிக்கு முன் குவிந்தனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தின் மையப்பகுதியான சன்னதி தெருவில், பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி என 7-க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. தற்பொழுது பாரத ஸ்டேட் வங்கியில் இரவு காவலர்கள் யாரும் இருப்பதில்லை.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று இயங்கி வந்த வங்கியை வழக்கம்போல் மாலையில் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் அப்பகுதியில் பெரும்பாலும் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென அலாரம் ஒலித்ததால் அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் அதிர்ச்சியடைந்து வங்கிக்கு முன் குவிந்தனர்.

இதையடுத்து வங்கிக்குள் கொள்ளையர்கள் நுழைந்துவிட்டனரா அல்லது மர்மநபர்கள் ஏதேனும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்களா என ஜெயங்கொண்டம் போலீசாராக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் வங்கியின் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.


இதைத் தொடர்ந்து வங்கிக்கு வந்த ஊழியர்கள் போலீசார் முன்னிலையில் வங்கியை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, வங்கிக்குள் மர்ம நபர்கள் யாரும் இல்லை. (லாக்கர்) பண பாதுகாப்பு அறையும் பாதுகாப்பாக இருந்தது. இதையடுத்து அலாரம் அணைக்கப்பட்டது. திடீரென அலாரம் எப்படி ஒலித்தது என போலீசார் வங்கி ஊழியர்கள் உதவியுடன் விசாரித்து வருகின்றனர்.