கல்வி கட்டணத்தை செலுத்தமுடியாததால் படிப்பை பாதியில் நிறுத்திய அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவி ரங்கீலாவிற்கு, விஜய் ரசிகர் மன்றத்தினர் கல்விக்கட்டணம் செலுத்த முன் வந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் பூவிருந்தன்குடி கிராமத்தை சேர்ந்த ரங்கீலா கன்னியாகுமரியில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பயின்று வருகிறார். அவரின் ஏழ்மை நிலையை அறிந்த கன்னியாகுமரி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஜோஸ்பிரபு, கல்விக்கட்டணம் செலுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் சொன்னப்படி அவர் உதவி செய்யாததால் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவி ரங்கீலா சொந்த கிராமத்திற்கு திரும்பினார். இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அரியலூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர், ஜோஸ்பிரபு என்பவர் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி என்றும், அவரின் பொய் வாக்குறுதிக்கும் நடிகர் விஜய்க்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.
அரியலூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜோஸ்பிரபு, தான் தற்போதும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகியாக உள்ளதாகவும், மாணவி ரங்கீலாவிற்கு தான் உதவி செய்ய தயாராக இருந்தும் அரசியல் காழ்ப்புணர்வால் இவ்விவகாரம் பூதாகரமாக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். இதனிடையே, கல்விக்கட்டணம் செலுத்த வசதியின்றி தவித்து வந்த மாணவி ரங்கீலாவிற்கு, அரியலூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் ஆதரவு கரம் நீட்ட முன் வந்திருப்பது அவருக்கு ஆறுதலை அளித்துள்ளது.