மேகமலை மணலாறு பகுதியில் தொடர்குடியிருப்பில் உள்ள ரேஷன் கடையை உடைத்த அரிக்கொம்பன் யானை, ரேஷன் அரிசியை சாப்பிட்டு சென்றுள்ளது தமிழக வனத்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரிக்கொம்பன் அரிசி தேடி உலாவுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் மூணாறை அடுத்துள்ள சின்னகானல் பகுதியில் 10 பேரை பலி கொண்ட ஆட்கொல்லி அரிக்கொம்பன் யானையை, கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின், அரிக்கொம்பன் தேக்கடி புலிகள் காப்பக அடர்ந்த வனப்பகுதிக்குள் திறந்துவிடப்பட்டது. அரிக்கொம்பன் யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டு ஜிபிஎஸ் மூலம் வனத்துறையினர் அதை கண்காணித்து வருகின்றனர்.
கடந்த ஆறாம் தேதி தேக்கடியில் இருந்து இடம்பெயர்ந்த அரிக்கொம்பன் யானை தமிழக பகுதியான மேகமலை வனப்பகுதிக்குள் நுழைந்து, அரசு பேருந்தை வழிமறித்தது. இதனையடுத்து மேகமலை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏழு மலைகிராமங்களுக்கு இரவில் வீட்டை விட்டு வெளியே வருவதும், பகல் நேரத்தில் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வருவதும் கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள் மேகமலை செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை (இன்று) அதிகாலை மணலாறு தொடர் குடியிருப்பில் அமைந்துள்ள ரேஷன் கடையின் கதவை உடைத்து அரிசியை எடுத்து அரிக்கொம்பன் உண்டுள்ளதும், குடியிருப்பின் ஒரு வீட்டில் தும்பிக்கையை நீட்டி அரிசியை தேடியதும் தமிழக வனத்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பர் மணலாறு சென்ற அரிக்கொம்பன், அங்கு கேரளா வனத்துறை கண்காணிப்பு முகாமிற்குள் நுழைந்து வனத்துறையினர் சமைக்க வைத்திருந்த அரிசியையும் உண்டபின் வனத்திற்குள் சென்றுள்ளது.
இதையடுத்து அரிக்கொம்பன் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரிக்கொம்பன் மணலாறு ரேஷன் கடையை உடைத்து அரிசி உண்டது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு பொதுமக்களுக்கு ஆபத்து நிகழா வண்ணம் அரிக்கொம்பனை கண்காணிக்க மட்டுமே அரசு உத்தரவு உள்ளது என்றும், அரிக்கொம்பன நடமாட்டத்தை தடுக்க எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுமுடிவெடுக்கும் எனவும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக உதவி இயக்குனர் ஆனந்த் புதிய தலைமுறையிடம் தெரிவித்தார்.
ரேஷன் கடை, குடியிருப்பு பகுதிகள், வனத்துறை முகாம்களில் அரிசியை தேடி உலாவும் அரிக்கொம்பன் யானை நடமாட்டத்தால் மலை வரலாறு உள்ளிட்ட சுற்றுப்புற மலை கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.