பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய பாமகவினர் மீது நடவடிக்கைக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் இணைந்து 4 நாட்கள் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். நேற்று தொடங்கிய போராட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
சென்னை அருகே தாம்பரம், பம்மல் உள்ளிட்ட இடங்களில் பாமகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டபோது ரயில்கள் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், தண்டவாளத்தில் இரும்பு கம்பிகளை வைத்து அடைத்தனர் என்ற புகாரும் எழுந்தது.
இந்நிலையில் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும், அதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் இந்திய மக்கள் மன்றத்தைச் சேர்ந்த வாராகி என்பவர் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த ராமதாஸ், அன்புமணி மீது வழக்குப் பதியக்கோரியும் வன்னியர் சங்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் அந்த முறையீட்டில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக வழக்கறிஞர் ஜானகிராமன் ஆஜராகி நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு முறையிட்டனர்.
அப்போது, மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும், எந்த நீதிபதிகள் விசாரணை செய்ய வேண்டும் என்பதை பதிவுத்துறைதான் முடிவு செய்யும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இன்று மதியத்திற்குள் மனுவாக தாக்கல் செய்ய உள்ளதாக வாராகி தெரிவித்துள்ளார்.