தமிழ்நாடு

மருத்துவச் சொற்கள் புரியாததால் தவறுதலாக தட்டச்சு - பிரமாண பத்திரம் தாக்கல் செய்த அப்போலோ

மருத்துவச் சொற்கள் புரியாததால் தவறுதலாக தட்டச்சு - பிரமாண பத்திரம் தாக்கல் செய்த அப்போலோ

webteam

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கைகளை ஆராய நிபுணத்துவம் கொண்ட மருத்துவக்குழுவை அமைத்து, ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஆறுமுகசாமி ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாள்களில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் விவரங்களை ஆயிரம் பக்கங்கள் அடங்கிய சுமார் 30 புத்தகங்கள், சிடிக்கள், எக்ஸ்ரே, ஈசிஜி போன்றவை ஆணையத்திடம் அளித்திருப்பதை பிரமாண பத்திரத்தில் அப்போலோ சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், ஆவணங்களை சரிபார்க்க மருத்துவர் குழுவை அமைக்க, ஆணையத்துக்கு கடந்த மே மாதம் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. ஆனாலும், வெளிமாநிலங்களில் இருந்து மருத்துவர்களை அழைத்தும், ஆணையத்தால் இதுவரை மருத்துவர் குழுவை அமைக்க முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

விசாரணை ஆணையத்தின் விசாரணையின்போது, மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உதவி இல்லாததால், மருத்துவம் சார்ந்த அறிவியல் உண்மைகள், நடைமுறைகள் விளக்குவதில் மருத்துவமனை தரப்பில் மிகுந்த சிரமத்தைச் சந்திக்க நேர்ந்தது என்றும், சில மருத்துவச் சொற்கள் புரியாததால் தவறுதலாக தட்டச்சு செய்ததையும், அந்த முக்கிய தவறுகளை மீண்டும் மீண்டும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டும் நிலையும் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தவறுகளால், அறிவியல் உண்மைகளையும், மருத்துவ அறிவியலையும் புரிந்துகொள்வதிலிருந்து ஆணையம் விலகிச் சென்றுவிடும் என்றும் கூறியுள்ளது. 

எனவே, விரைவாக மருத்துவர் குழு அமைக்க ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்போலோ தாக்கல் செய்த ஆவணங்களை மருத்துவர்கள் குழு மூலம் ஆராய வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதோடு, ஜெயலலிதாவின் தனிப்பட்ட தகவல்களில் மிகப்பெரிய அளவில் தலையீடு ஏற்பட்டிருப்பதையும், அவரது தனிப்பட்ட உடல் நிலை குறித்த தகவல் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படுவதையும் கவலையோடு பதிவு செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மருத்துவக் குழு அமைத்து விசாரிப்பதன் மூலம், தனி ஒரு பெண்ணாக ஜெயலலிதாவின் கண்ணியமும், தனி மனித ரகசியமும் காக்கப்படுமென நம்புவதாகவும் அப்போலோ தெரிவித்துள்ளது.