'கட்சி தொடங்கப்போவதில்லை' என்ற ரஜினிகாந்தின் அறிவிப்பு குறித்து அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா தனது கருத்தை பகிர்ந்திருக்கிறார்.
வரும் 31-ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றுக்கூறிய ரஜினிகாந்த் தற்போது உடல்நிலை - மருத்துவக் காரணங்களால் ‘கட்சி ஆரம்பிக்கவில்லை’ என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. கட்சி ஆரம்பிப்பேன் என்று நம்பிய ரசிகர்கள், மக்களுக்கு என் முடிவு ஏமாற்றம் தரும். தேர்தல் அரசியலுக்கு வராமால் என்னால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா கூறும்போது, "ரஜினிகாந்த் தற்போது எடுத்த முடிவானது மருத்துவர்களின் அறிவுரைக்கிணங்க அவரது உடல்நலன் கருதி எடுக்கப்பட்டது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், அவர் எதற்காக கட்சி தொடங்கவேண்டும் என்று நினைத்தாரோ, அந்த கொள்கைகளுக்கு ரசிகர்கள் ஆதரவாக இருக்கவேண்டும் என அவர் வழிகாட்டுவார் என நான் நம்புகிறேன்.
ரஜினிகாந்த் ’அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம்’ என்று கூறியிருந்தார். தற்போது அரசியல் மாற்றம் இல்லையென்பதை ஒப்புக்கொண்டதால்தான் அவர் கட்சி தொடங்கவில்லை.
மேலும், அவர் கட்சி தொடங்கவில்லை என்பது அதிமுகவிற்கு அநுகூலமான செய்திதான். அவர் தொடர்ந்து அதிமுக ஆட்சியை ஆதரிப்பார்; அதேபோல் அவரது ரசிகர்ளையும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்வார்’’ என்று கூறினார்.