எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயத்தின் சார்பில் தமிழ்ப் பேராய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2012ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயத்தின் சார்பில் தமிழ்ப் பேராய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டு 15 லட்சம் ரூபாய் மதிப்பில், துறைவாரியாக 10 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது எழுத்தாளர் கவிப்பித்தனுக்கும், பாரதியார் கவிதை விருது மரபின் மைந்தன் முத்தையாவிற்கும் வழங்கப்படுகின்றன.
அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது இரா.கற்பகத்திற்கும், அப்புசாமியின் அறிவியல் தமிழ் விருது மற்றும் அப்துல் கலாம் தொழில்நுட்ப விருது சந்திரிகா சுப்ரமணியனுக்கும் வழங்கப்படுகின்றன.
ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது மற்றும் முத்தாண்டவர் தமிழிசை விருது அரிமளம் சு.பத்மநாபனுக்கும், பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது ஆ. தனஞ்செயனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சுதேசிமித்திரன் தமிழ் இதழ் விருது வி.முத்தையாவிற்கும், தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது சுவிசர்லாந்து நாட்டைச் சேர்ந்த தமிழ்க் கல்விச் சேவை அமைப்பிற்கும் வழங்கப்படுகின்றன.
அருணாசலக் கவிராயர் விருது களரி தொல்கலைகள் கலைஞர்கள் மேம்பாட்டு மையத்திற்கும் பாரிவேந்தர் பைந்தமிழ் விருது பேராசிரியர் முனைவர் இ.சுந்தரமூர்த்திக்கும் வழங்கப்படுகின்றன. நீதியரசர் பி.தேவதாஸ் தலைமையிலான ஐந்து நடுவர்கள் கொண்ட குழுவினர் விருதுக்கு உரியவர்களை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளனர்.