திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு, மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராடிய 3 விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். அவர்களின் 54-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெருமாநல்லூர் பகுதியில் உள்ள விவசாயிகள் நினைவு ஸ்தூபியில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மலர் வளையம் வைத்து நேற்று அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்...
“ஒரு பைசா மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராடிய விவசாயிகள், திமுக ஆட்சிக் காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது கலைஞர் துப்பாக்கியில் இருந்து தோட்டக்கள் வராமல் பூக்களா வரும் என கேள்வி எழுப்பினார். அப்போது இருந்த திமுகவும் இப்போது இருந்த திமுகவும் இன்னும் மாறாமல் அதே நிலையில் இருக்கிறது... ஆனால், இலவச மின்சாரத்தை பாஜக எப்போதும் ஆதரிக்கிறது. பாரத பிரதமர் மோடி அதை ஒருபோதும் கைவிட மாட்டார். ஏனென்றால் விவசாயம் முக்கியமானது என்பதை பாஜக அறிந்திருக்கிறது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பெருமாநல்லூரைச் சேர்ந்த மூன்று விவசாயிகள் மட்டுமல்லாது வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு போராட்டங்களில் உயிர்நீத்த 46 விவசாயிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும்.
ஜூலை ஒன்பதாம் தேதி பாஜக சார்பில் தொடங்கப்பட உள்ள நடைப்பயணத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட இருக்கிறோம். பாஜக கள்ளுக் கடைகளை முழுவதாக ஆதரிக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் இந்த அறிக்கையில் வெளியிடப்படும். பனைமரம் மற்றும் தென்னை மரங்களை பாதுகாப்பதன் மூலம் ஒரு லட்சம் கோடி வருவாய் ஈட்டக்கூடிய வழிமுறைகளை அதில் வெளியிட இருக்கிறோம்.
புதுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் கூறிய பொய்யை மக்கள் இன்னும் ஏற்க தயாராக இல்லை. ஜல்லிக்கட்டு போட்டிக்காக நாம் நன்றி சொல்ல வேண்டுமென்றால் அது பாரத பிரதமர் மோடி ஒருவருக்கு மட்டுமே சொல்ல வேண்டும். அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு பிரதமரை நேரில் அழைத்து வந்து சிறப்பு செய்ய இருக்கிறோம். நேற்றைய தினம் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு ‘பீகாரில் இருந்து எல்லாரும் பிழைப்பு தேடி தமிழகம் வருகின்றனர். அது போல தான் ஆளுநரும் வந்திருக்கிறார்’ என கடுமையாக விமர்சனம் வைத்து, கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.
ஆனால், நாளைய தினம் கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க பீகார் முதல்வரைத்தான் அழைத்து வந்திருக்கிறார்கள். இதன் மூலம் திராவிட மாடல் அரசின் இரட்டை வேடம் தெரிய வருகிறது. அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க தடையில்லை என நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. ஏற்கெனவே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறார்.
இப்படியே போனால், இன்னும் ஓராண்டிற்குள் தமிழக அமைச்சரவையில் முதல்வர் மட்டுமே எஞ்சி இருக்கக்கூடிய நிலை ஏற்படும். ஆனால், முதல்வர் மீதும் சிபிஐ-யில் புகார் அளித்துள்ளோம்.
சீமான் அண்ணனை பொறுத்தவரை, பல இடங்களில் பெரிதும் அவரை மதிக்கிறோம். ஓட்டுக்கு பணம் கொடுப்பதில்லை என்ற பெரிய போராட்டத்தை அவர் முன்னெடுத்துள்ளார். பிரதமர் மோடியும், அப்படியொரு அரசியலை உருவாக்குவதற்குத்தான் பாடுபடுகிறார் என சீமான் அண்ணனுக்கும் தெரியும். நாம் தமிழர் கட்சியும் பாஜக-வும் கொள்கை ரீதியில் வேறுபட்டு இருக்கலாம். ஆனாலும் தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டுவர ஒரே கோட்டில் பயணிக்கிறது. தமிழக பாஜகவில் இதுவரை எம்எல்ஏ-க்கள், எம்பி-கள் இருந்திருக்கிறார்கள். தற்போதும் எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள். இவர்களில் யார் மீதாவது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் விஜய் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “யாரொருவர் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் ஊழலை ஒழிக்கக்கூடிய கட்சியை தொடங்கப்போகிறேன் எனக்கூறினாலும், அதை பாஜக வரவேற்கும். மக்கள் மன்றத்தில் எல்லோரும் போய் நிற்போம். மக்கள் யாரை ஏற்கிறார்களோ, அவர்கள் வரலாம். இங்கு மக்கள் தான் எஜமானிகள்
அப்படி விஜய் அவர்கள் வர வேண்டுமென நினைத்தால், கண்டிப்பாக வரட்டும். அதை தீயசக்திகள் தடுக்க நினைத்தால் தமிழக மக்கள் விடமாட்டார்கள். அப்படி வந்தபிறகு, அவருடைய கொள்கைகள் - கருத்துகளை தெரிவிக்கட்டும், என்ன செய்யப்போகிறார் - தன் கனவு என்ன போன்றெல்லாம் சொல்லட்டும்... பின் விரிவாக பேசுவோம். தமிழக அரசியலை சுத்தப்படுத்த யார் வேண்டுமானாலும் வரலாம், அதை பாஜக வரவேற்கிறது.”
செய்தியாளர்களை சந்தித்த பின் அண்ணாமலை புறப்பட்டுச் சென்ற நிலையில், அண்ணாமலை வருவதற்கு முன்பாக அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சார வாகனம் மற்றும் ஒலிபெருக்கி ஆகியவற்றிற்கு அனுமதி வழங்க மறுத்ததாகவும், பாஜகவினரை தரக்குறைவாக பேசியதாகவும் குற்றம்சாட்டி காவல் துறையை கண்டித்து கோவை ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் பாஜகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாஜகவினருடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது