மாதிரிப் படம் pt web
தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக மாணவி விடுதியில் தற்கொலை - கடிதத்தில் இருந்த காரணம் - காவல்துறையினர் விசாரணை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Angeshwar G

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து வந்த மாணவி சரோஜ் பெனிடா. திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவி மாணவியர் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை கல்லூரியின் விடுதியில் அறையிலேயே தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதனை கண்ட சக மாணவிகள், விடுதி காப்பாளர் உதவியுடன் கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது அறையில் ஒரு கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

அதில், தன்னுடன் படித்த மாணவிகள் தற்போது 5 ஆம் ஆண்டு படித்து வருகின்றனர். ஆனால், தான் மட்டும் 3 ஆம் ஆண்டு படித்து வருதால் மன வருத்தமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது தான் உண்மையான பிரச்னையா? வேறு எதுவும் காரணம் இருக்குமா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.