தருமபுரியில் கிணற்றில் விழுந்த யானையை மீட்டு சிறப்பான சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர் பிரகாஷுக்கு அண்ணா பதக்கம் விருது வழங்கப்பட்டது.
72வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியேற்றினார். இதையடுத்து தேசியக் கொடி அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இந்த குடியரசு தினவிழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். மேலும் தமிழகத்தில் வீரதீர செயல்களை புரிந்த 4 பேருக்கு முதல்வர் பழனிசாமி அண்ணா பதக்கங்களை வழங்கினார்.
அதன்படி தருமபுரியில் கிணற்றில் விழுந்த யானையை மீட்டு சிறப்பான சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர் பிரகாஷுக்கு அண்ணா பதக்கம் விருது வழங்கப்பட்டது.
ரயில் விபத்தை தடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர் சுரேஷுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. கடும் பனி மூட்டத்திலும் தண்டவாளத்தில் இருந்த 2 பெரும் பாறைகளை கண்டு சமயோஜிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
நீலகிரியில் காவலர் ஜெயராம் உயிரை காப்பாற்றியதற்காக வாகன ஓட்டுநர் புகழேந்திரனுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் புலிவலம் அரசு பள்ளி உதவி ஆசிரியர் முல்லைக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. தன் உயிரைப்பற்றி கவலைப்படாமல் 26 மாணவர்களை காப்பாற்றியதற்காக அவருக்கு இந்த பதக்கம் வழங்கப்படுகிறது.
இந்த பதக்கங்களுடன் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.