தமிழ்நாடு

கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்த கிராமம் !

கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்த கிராமம் !

webteam

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே மரக்கன்று வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் ஒரு கிராமமே கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மற்றும் அதன் அருகே உள்ள கல்லுக்குடியிறுப்பில் சுமார் 300 குடும்பங்கள் நர்சரி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கல்லுக்குடியிறுப்பு கிராமத்தில் மட்டும் சுமார் 200 குடும்பங்கள் நர்சரி என்னும் மரக்கன்று வளர்க்கும் தொழிலை முழு நேர பணியாக செய்து வருகின்றனர். இவர்கள் வேம்பு, புளி, கொய்யா, வாழை, ரோஸ்வுட், தேக்கு, மா, பலா, சந்தனம், செம்மரம், ரோஜா பூ உள்ளிட்ட ஏராளமான கன்றுகளை உற்பத்தி செய்து தமிழ்நாடு மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். மேலும் நிழல், விதை எடுப்பதற்கு, ஒட்டுக்கா வேலியோரம் மரங்கள் நட்டு வளர்ப்பது வழக்கம். 

இந்நிலையில் கடந்த 16ம் தேதி அதிகாலை அரிமளம் பகுதியில் வீசிய கஜா புயல் நர்சரி தொழில் செய்தவர்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது. புயலின் போது வீசிய பலத்த காற்று விதைக்காக வேலியோரம் வைத்திருந்த ராட்சத மரங்களை வேரோடு சாய்த்தது. இவை பெரும்பாலும் நர்சரி குடில், பதியம் வைத்திருந்த பகுதியில் மரங்கள் சாய்ந்ததால் பல லட்சம் மதிப்புள்ள இளம் கன்றுகள் சேதமடைந்தது. மேலும் காற்றின் தீவிரத்தை தாங்க முடியாத நர்சரி கன்றுகள் ஆட்டம் கண்டது. இதானால் இளம் கன்றுகள் வாட தொடங்கியுள்ளது. போதாகுறைக்கு கடந்த 7 நாட்களாக அப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் நர்சரி கன்றுகளுக்கு நீர் விட முடியாமல் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

பெரும்பாலானா கன்றுகள் வாடிப்போய் இருப்பதால் மர கன்றுகளை வாங்க வியாபாரிகள் தயங்குகின்றன்றனர். மின்சாரமும் இன்றி ஜெனரேட்டர்களுக்கு தட்டுபாடு நிலவுவதால் வாடும் மர கன்றுகளை காப்பாற்ற முடியாமல் துடிக்கின்றனர். புயல் வந்து பல நாட்கள் ஆகியும் இதுவரை எந்த ஒரு அரசு, அரசியல் வாதிகளும் தங்கள் பகுதியில் ஒரு ஆறுதல் கூட தெரிவிக்காதது வருத்தமளிப்பதாகவும் கருகும் நிலையில் உள்ள மர கன்றுகளையும், வாழ்க்கையையும் காப்பற்ற அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.