கேரளாவில் நடைபெற்ற பழைய அம்பாசிடர் கார் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஒரு காலத்தில் கார்களில் கொடிகட்டி பறந்தது "அம்பாசிடர்" கார் எனலாம். எத்தனை வகை புதிய கார்கள் வந்தாலும் "அம்பாசிடர் கார்" தரும் சுகமும், பாதுகாப்பும் எதிலும் கிடைப்பதில்லை என்பதை பலர் கூற கேட்டிருக்கலாம். அந்த வகையில் இந்திய குடியரசுத் தலைவர் துவங்கி மாவட்ட ஆட்சியர் கடந்து ஊராட்சி தலைவர் வரை அரசு காராக மாறியது மட்டுமின்றி அனைத்து முக்கிய அரசியல்வாதிகள், விஐபிக்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் வலம் வந்தது "அம்பாசிடர் கார்" என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
முதன்முதலாக குண்டு துளைக்காத காரை அறிமுகப்படுத்தியது "அம்பாசிடர்" கார் நிறுவனம் என்ற பெருமை கொண்ட இந்த அம்பாசிடர் கார் தயாரிப்பை அந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தியது. இதனால் கார்களின் முதல் வரிசையில் இருந்த அம்பாசிடர் கார் தற்போது காண்பதற்கு அரியகாட்சிப்பொருளாக மாறிவிட்டது.
ஆனாலும் கேரளாவில் 1958-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரையில் விற்பனைக்கு வந்த அம்பாசிடர் கார்களை 100-க்கும் மேற்பட்டோர் இன்னும் பத்திரமாக வைத்திருக்கின்றனர். அவர்கள் ஒன்றிணைந்து "அம்பாசிடர் ஃபேன்ஸ் க்ளப்" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அந்த அமைப்பு சார்பில் பழைய மாடல் அம்பாசிடர் கார் ஊர்வலம் கொச்சியில் இருந்து துவங்கியது. கார் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் 20-க்கும் மேற்பட்ட பழைய அம்பாசிடர் கார்களில் இடுக்கியின் பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு சென்று மகிழ்ந்தனர்.
நிறைவாக இடுக்கியின் முக்கிய சுற்றுலாத்தலமான தேக்கடி வந்த இந்த அம்பாசிடர் கார் குடும்பங்களுக்கு தேக்கடி சுற்றுலா பாதுகாப்பு குழு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் பொதுமக்கள் பழைய அம்பாசிடர் கார்களை கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் அம்பாசிடர் கார் குறித்த தங்களது அனுபவங்களையும் நினைவுகளையும் அவர்கள் அசைபோட்டு மகிழ்ந்தனர்.