தமிழ்நாடு

“ஸ்டெர்லைட்டை மூடியபின் காற்றின் மாசுபாடு குறைந்துள்ளது” - அறிக்கை

“ஸ்டெர்லைட்டை மூடியபின் காற்றின் மாசுபாடு குறைந்துள்ளது” - அறிக்கை

rajakannan

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் காற்றின் மாசுபாடு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து. மேலும் தருண் அகர்வாலா தலைமையில் கொண்ட குழு ஆறு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இதனைதொடர்ந்து தருண் அகர்வாலா, சதீஷ் சி.கர்கோட்டி, வரலட்சுமி ஆகியோர் கொண்ட குழு  ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் ஆய்வு நடத்தினர். நீதிபதி தருண் அகர்வாலா குழுவின் அவகாசம் வரும் 30 ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில், அறிக்கை சமர்ப்பிக்க வல்லுனர் குழுவின் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. நவம்பர் 30 ஆம் தேதிக்குள்ளாக வல்லுநர் ஆய்வுக் குழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணையை வரும் டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் காற்றின் தரம் பற்றிய தரவு பட்டியல் தருண் அகர்வாலா, சதீஷ் சி.கர்கோட்டி, வரலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள அந்த அறிக்கையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் காற்றின் தரம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றில் கலந்துள்ள சல்பர் டை ஆக்சைடு அளவு 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அளவைவிட ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட அளவானது கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.