தமிழ்நாடு

2026க்குள் மதுரையில் எய்ம்ஸ் பணிகள் நிறைவடையும் - மத்திய இணையமைச்சர் உறுதி

2026க்குள் மதுரையில் எய்ம்ஸ் பணிகள் நிறைவடையும் - மத்திய இணையமைச்சர் உறுதி

PT

2026-ஆம் ஆண்டுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவடையும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மண்டல கூட்டங்களில் பங்கேற்கும் பொருட்டு தருமபுரி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தேசிய சுகாதார திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து அவர் விளக்கினார். கொரோனா பரவல் காரணமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தாமதமானதாகவும், வரும் 2026ஆம் ஆண்டுக்குள் பணிகள் நிறைவடையும் என்றும் மத்திய அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.

“தமிழக அரசு மத்திய அரசு நிதியில் ஒதுக்கும் திட்டங்களில் பிரதமர் படத்தையும், மத்திய அரசு சின்னங்களையும் வெளியிடுவதில்லை. சுகாதார திட்டங்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வெளியிடப்படும் விளம்பரங்களில் மத்திய அரசு நிதி என்றும் குறிப்பிடப்படவில்லை, பாரத பிரதமரின் புகைப்படமும் இடம்பெறவில்லை. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் அலுவலர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் கோவிட் தொற்று பரவல் காரணமாக தடைப்பட்டது. மத்திய அமைச்சரவை இதற்காக நிதியை ஒதுக்கியது. இப்போது மறு மதிப்பீடு செய்யப்பட்டு, தற்போது 1977 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளி பணிகள் நடைபெற்று வருகிறது. தற்காலிகமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பிஎஸ் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று, வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2026 ஆம் ஆண்டுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடையும்” என அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார்.