நீட் தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கையையும் அதிமுக ஆதரிக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், "நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் சட்ட முன்வடிவினை ஆளுநர் தமிழக அரசிற்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், 5 ஆம் தேதி இது தொடர்பாக அனைத்துக்கட்சிகளின் ஆலோசனைகளையும் வழங்க அதிமுக சார்பில் உறுப்பினரை அனுப்ப கோரியிருந்தீர்கள்.
நீட் தொடர்பாக ஏற்கெனவே அதிமுகவின் கருத்துக்கள் சட்டப்பேரவையிலும் , 8.1.2022 அன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. நீட் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. எனவே நீட் தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கையையும் அதிமுக ஆதரிக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.