தமிழ்நாடு

காணாமல் போன சிறுமி ! போராடிய நரிக்குறவ பெற்றோர்கள் ! 100 நாள் கழித்து மீட்பு

காணாமல் போன சிறுமி ! போராடிய நரிக்குறவ பெற்றோர்கள் ! 100 நாள் கழித்து மீட்பு

webteam

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் அணைக்கட்டு என்னுமிடத்தில் கடத்தப்பட்ட நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவர் (நாடோடி) இனத்தம்பதியான வெங்கடேசன் காளியம்மாளின் இரண்டு வயது மகள்தான் ஹரிணி. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி பாசி மணிகள் விற்கப் போன அவர்கள், அணைக்கட்டு காவல் நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கினர். நடுராத்திரியில் ஹரிணி காணாமல் போக,பதறிப்போன அந்தத் தம்பதி, அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஹரிணி கிடைக்கிற வரை இந்த இடத்தைவிட்டுப் போக மாட்டோம் என்று அங்கேயே தங்கி இருந்தார்கள்.

இந்தச் சுழலில் கரூரைச் சேர்ந்த இணைந்த கைகள் என்ற சமூக அமைப்பு ஹரிணியைக் கண்டுப்பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு என்று அறிவித்தனர். அதனை சமூக வலைதளங்களில் பரப்புவதோடு, மாவட்ட வாரியாக நோட்டீஸாக அச்சடித்து விநியோகித்து வந்தனர். காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை தனிப்படைகள் அமைத்து ஹரிணியைத் தேடிவந்தனர். 

இந்நிலையில் கொல்கத்தாவில் ஹரிணி போல ஒரு குழந்தை உள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி தலைமையில் ஆறு போலீஸாரும், ஹரிணியின் தந்தை வெங்கடேசனும் சென்றிருந்தார்கள். அங்கே ஹரிணி கிடைக்காததால், மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லதா ரஜினிகாந்த் காணாமல் போன குழந்தை மும்பை அருகே இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது என மாயமான குழந்தையின் தந்தை வெங்கடேஷிடம் தகவல் தெரிவித்திருந்தார்.அதே சமயத்தில் குழந்தை மாயமான நேரத்தில் அங்கிருந்து கிடைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் பதிவான மர்ம நபர் ஒருவர் புகைப்படத்தையும் போலீசார் வெளியிட்டனர். 

இந்த நிலையில் இன்று அதிகாலை திருப்போரூர் பகுதியில் குழந்தை இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கே ஒருவரது வீட்டில் இருந்த ஹரிணியை மீட்டனர். இதனைத் தொடர்ந்து ஹரிணியின் பெற்றோரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து ஹரிணி உடல் இருக்கக்கூடிய அங்க அடையாளங்களை கேட்டு ஹரிணிதான் என்று உறுதிப்படுத்தி ஹரிணியை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

குழந்தையை கடத்தியதாக பிரகாஷ் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணையில் தனது நண்பர் ஒருவருக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்தும் குழந்தை இல்லாத காரணத்தினால் மிகுந்த மன வேதனையில் இருந்ததாகவும் அவர்களுக்காக இந்த குழந்தையை கடத்தி தன் நண்பனிடம் கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரகாஷ் என்பவரை கைது செய்து மற்ற நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக காணாமல் போன தன் குழந்தையை மீண்டும் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியில் ஹரிணியின் பெற்றோர் இருக்கிறார்கள். குழந்தையை பத்திரமாக மீட்டு கொடுத்த காவல்துறைக்கு மிகுந்த நன்றியை தெரிவிப்பதாக அவ்ர்கள் தெரிவித்தனர்.