தமிழ்நாடு

“போலீஸ் வாகனத்தில் செல்கிறது அதிமுகவினரின் பணம்” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

“போலீஸ் வாகனத்தில் செல்கிறது அதிமுகவினரின் பணம்” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

webteam

அதிமுகவினர் வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணத்தை காவல்துறை வாகனத்திலேயே கொண்டு செல்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ், பள்ளி வாகனம், கட்சி வாகனங்கள், பிரமுகர்களின் கார்கள் என அனைத்திலும் பணம் கொண்டு செல்லப்படுகிறதா ? என்ற சோதனைகள் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை ரூ.137.81 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ரூ.141 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இருப்பினும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் நேற்று ஈரோட்டில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து திமுக தலைவர், மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவினர் வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணத்தை போலீஸ் வாகனத்திலேயே கொண்டு செல்கின்றனர். அதனை திமுக தொண்டர்கள் மக்களுடன் கைகோர்த்து பிடிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் பணத்தை போலீஸ் வாகனங்களிலேயே கொண்டு செல்வதற்காகத் தான், டிஜிபி ராஜேந்திரனுக்கு பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது” என்று குற்றஞ்சாட்டினார்.

இதற்கிடையே இன்று மு.க.ஸ்டாலின் மீது கோவை காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமைச்சர் தங்கமணிக்கு எதிராக ஆதாரங்கள் இன்றி உண்மைக்கு புறம்பான வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக உண்மைக்கு புறம்பானவற்றை பேசியுள்ளார் என்றும், இனிமேல் அதனை பரப்புரையில் பேசக்கூடாது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.