நடிகை காயத்ரி ரகுராம் குடிபோதையில் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டிச் சென்று போலீசாரிடம் சிக்கினார்.
சென்னை அடையாறு திருவிக மேம்பாலம் அருகில் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் எதிரில் அபிராமபுரம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகரில் இருந்து அடையாறு நோக்கி அசுர வேகத்தில் பென்ஸ் கார் ஒன்று தாறுமாறாக ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அதனை மடக்கிப் பிடித்து நிறுத்திய போலீசார் காரில் இருந்த பெண்ணை கீழே இறங்க சொல்லினர். விசாரணையில் காரில் இருந்தது பிரபல நடிகை காயத்ரி ரகுராம் என தெரியவந்தது.
நடன இயக்குநர் ரகுராமின் மகளான காயத்ரி ரகுராம், பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். காரில் இருந்து கீழே இறங்காமல் தன்னை அங்கிருந்து போகவிடும்படி போலீசாரிடம் காயத்ரி ரகுராம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து போலீசார் அவரது அருகில் சென்று முகர்ந்து பார்த்தபோது அவர் மது போதையில் இருப்பது தெரியவந்தது.
பிரத் அனலைசர் கருவியை அவரது வைத்து போலீசார் சோதனை நடத்த முயன்றனர். ஆனால் வாக்குவாதம் ஏற்பட்டது. நடிகையை சமாதானப்படுத்திய பிறகு சோதித்ததில் 33 சதவீதம் மது அருந்தியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் காரின் ஆவணங்களை காட்டச்சொல்லி சரிபார்த்தனர். அவரது டிரைவிங் லைசென்சை கேட்ட போது அது அவரிடம் இல்லை என தெரியவந்தது.
இதனையடுத்து நடிகை காயத்ரி ரகுராம் மீது, போதையில் அதிவேகமாக கார் ஓட்டியது மற்றும் லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியது ஆகிய குற்றங்களுக்காக வாகனச் சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி அவரிடம் போலீசார் ரூ. 3,500 அபராதம் வசூலித்தனர்.
காயத்ரி ரகுராம் உச்சகட்ட போதையில் இருந்ததால் அவரை கார் ஓட்ட போலீசார் அனுமதி மறுத்தனர். போலீசாரே காரை ஓட்டிச்சென்று நுங்கம்பாக்கத்தில் உள்ள காயத்ரி ரகுராமின் வீட்டில் அவரை கொண்டு போய் பத்திரமாக விட்டு விட்டு வந்தனர்