மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் நிறுத்தப்பட வேண்டும் என நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார்.
மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமை நிறுத்தப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கொடுமை இந்தியாவில் மட்டுமே நிகழ்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும் என்கிற முழக்கத்தை முன் வைத்து ஜெய் பீம் மன்றத்தினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சத்யராஜ், விவேக், இயக்குநரும், நடிகருமான கரு.பழனியப்பன், இயக்குநர் ராம் ஆகியோர் பங்கேற்று மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் குறித்து உரையாற்றினர். இதுகுறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசிய சத்யராஜ், ‘வெளிநாட்டில் இது முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் இந்தியாவில் மட்டும் இதற்கு முடிவுகட்டப்படாமல் தொடர்ந்து வருகிறது. இது முக்கியமான பிரச்னை. இந்தப்பிரச்னைக்கு முற்றிலும் முடிவுகாணப்பட வேண்டும். இந்த அவலம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’ என அவர் பேசினார்.