தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், வரும் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், மார்ச் 4-ம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்கள், மேயர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்ய உள்ளனர். இந்தத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினரும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி தரப்பட்டுள்ளது என்று பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிரும் வேட்பாளர்கள் விஜய் படம், விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி போன்றவற்றை தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். வேட்பாளர்களை மாவட்ட பொறுப்பாளர்கள் இறுதி செய்வார்கள் என்றும், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். ஏற்கனவே 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின், விஜய் மக்கள் இயக்கம் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது.