தமிழ்நாடு

சிவாஜி மணிமண்டபத்தை ஜெயக்குமார் தலைமையில் திறக்க எதிர்ப்பு

சிவாஜி மணிமண்டபத்தை ஜெயக்குமார் தலைமையில் திறக்க எதிர்ப்பு

webteam

நடிகர் சிவாஜி மணிமண்டபத்தை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் திறக்க சிவாஜி சமூக நலப்பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அடையாறு பகுதியில் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மணிமண்டபம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான அக்டோபர் 1ஆம் தேதி திறந்து வைக்கப்படும் என்றும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைப்பார் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. விழாவில், தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், சிவாஜியின் குடும்பத்தினர் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சிவாஜி கணேசனை அவமதித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மணிமண்டபத்தை திறந்து வைக்கக்கூடாது என்று சிவாஜி சமூக நலப்பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ் கலையின் அடையாளமாகத் திகழும் மாபெரும் கலைஞருக்கான மணிமண்டபத்தை முதலமைச்சர் திறக்காவிட்டாலும், மூத்த திரைக்கலைஞரைக் கொண்டு திறக்கலாம் என்றும் அனைத்து கட்சியினர், அனைத்து திரைக்கலைஞர்களை அழைத்து சிவாஜி மணிமண்டபத்தை திறந்துவைக்க வேண்டும் என்றும் சிவாஜி சமூக நலப்பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.