தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையைட்டி நடிகர் ரஜினிகாந்த் முரசொலி இதழில் கலைஞர் குறித்தும் அவர் செய்த பணிகள் குறித்தும் வாழ்த்தி சிறப்பு கட்டுரையை எழுதி இருக்கிறார்.
அதில் கலைஞர் வசனங்களில் தான் நடிக்க இருந்த நிகழ்வு குறித்து பேசியுள்ளார் ரஜினி. அந்த நெகிழ்ச்சி ஃப்ளாஷ்பேக், இங்கே:
“நான் 1980–ல் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். அந்தத் திரைப்படத்தின் வசனங்கள் தயாரிப்பாளருக்கு திருப்தி தரவில்லை. படம் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் தயாரிப்பாளர் என்னிடம் வந்து ‘நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை சொல்கிறேன்... நம் படத்துக்கு கலைஞர் அவர்கள் வசனம் எழுத ஒப்புக் கொண்டார்’ என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.
எளிமையான தமிழ் வசனங்களை பேசி நடிப்பதற்கே திண்டாடிக் கொண்டிருக்கும் நான் கலைஞரின் வசனங்களை பேசி நடிப்பதா ??? நடக்காத காரியம்... இதற்கு நான் கர்நாடகாவிற்கே ஓடிப்போய் மறுபடியும் பேருந்தில் டிக்கெட்விற்க ஆரம்பித்து விடலாம். தயாரிப்பாளரிடம் முடியவே முடியாது என்று கூறினேன்.
இதைக் கேட்ட தயாரிப்பாளருக்கு இடி விழுந்த மாறி ஆயிற்று. அவர் எழுத சம்மதித்த பிறகும் நீங்கள் வேண்டாம் என்று கூறியதை அவரிடம் நான் எப்படி சொல்வது என்று திண்டாடி னார். நான் அவரை சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுங்கள், நானே அவரிடம் சொல்கிறேன் என்று கூறினேன்.
கலைஞர் அவர்களை சந்திக்க கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சென்றேன். 1977 ல் மியூசிக் அகாடமி அருகில் பார்த்த அதே முகம்.., அதே புன்னகை... வாங்க என்று அவருக்கே சொந்தமான அந்த கரகரப்புக் குரலில் என்னை அழைத்து நலம் விசாரித்தார். பின்பு ‘கதையைக் கேட்டேன்... நன்றாக இருக்கிறது. சிறப்பாக வசனங்களை எழுதிடலாம்’ என்றார்.
நான் அவரை சார் என்று தான் அழைப்பேன். ‘சார் உங்கள் வசனங்களை நான் பேச முடியாது. எளிமையான தமிழை பேசவே நான் சிரமப்படுகிறேன். அப்படி இருக்கும் போது உங்கள் வசனங்களை எப்படி நான் பேசுவது? என்னால் முடியாது. தவறாக நினைக்க வேண்டாம்’ என்று கூறினேன். அதற்கு அவர் சிரித்து ‘எனக்கு யாருக்கு எப்படி எழுதவேண்டும் என்று நன்றாகவே தெரியும். சிவாஜிக்கு எழுதுவது போல எம்.ஜி.ஆருக்கு எழுத மாட்டேன்.
அதே போல எம்.ஜி.ஆருக்கு எழுதுவதைப்போல சிவாஜிக்கு எழுதமாட்டேன். உங்கள் படங்களை நான் பார்த்துள்ளேன். உங்கள் ஸ்டைலில் நான் எழுதுகிறேன்’ என்று சர்வ சாதாரணமாக கூறினார். எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனை அந்த நொடியில் எனக்கு தோன்றியதற்கு நீ கெட்டிக்காரன்டா என்று நானே மகிழ்ந்து ‘சார் படப்பிடிப்பில் நாங்கள் சில வசனங்களை மாத்துவோம் சில வசனங்களை நீக்குவோம். அப்படி இருக்கும் போது உங்கள் வசனங்களை மாத்தவும் முடியாது நீக்கவும் முடியாது. அது சரியானதாகவும் இருக்காது’ என்று கூறினேன்.
அதற்கு அவர் ‘மாற்றுங்கள்.. ஒன்றும் தவறில்லை, அது என்ன திருக்குறளா?’ என்று கூறினார். எனக்கு ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தேன். இதை கவனித்த கலைஞர் சிரித்துக்கொண்டே ‘முன்னால் யார் வசனங்களை எழுதினாரோ அவரே எழுதட்டும்... நான் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டேன்... நீங்கள் கவலைப்பட வேண்டாம்...’ என்று கூறி தன் உதவியாளரிடம் தயாரிப்பாளரை அழைக்கும் படி கூறினார்.
தயாரிப்பாளரிடம் ‘என்னுடைய வசனங்களை பேசுவதற்கு தனக்கு கஷ்டமாக இருக்கும் என்று ரஜினி கூறுகிறார். நான் அவருடைய பாணியிலேயே எழுதித் தருகிறேன் என்று சொன்னேன். அவரும் சம்மதித்தார். ஆனால் இந்த மாதம் 10ஆம் தேதி படப்பிடிப்பு என்று ரஜினி கூறுகிறாரே... நான் அடுத்த மாதம் என்று தானே நினைத்துக் கொண்டிருந்தேன்... காலம் மிகவும் கம்மியாக இருக்கின்றது. ஆகையால் இந்தப் படத்திற்கு என்னால் வசனங்கள் எழுத முடியாது. அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறி தயாரிப்பாளரை அனுப்பி வைத்தார்.
தயாரிப்பாளரின் மனதையும் துன்புறுத்தாமல், என்னையும் திருப்திபடுத்திய அவருடைய செய்கையால் எனக்கு அவர் மீது இருந்த மதிப்பும், மரியாதையும் பல மடங்கு உயர்ந்தது. ஆனாலும் அவருடைய வசனங்களை பேசி நடித்திருக்கலாமோ? தவறு செய்து விட்டோமோ? என்ற ஒரு குற்ற உணர்ச்சி இன்றும் எனக்குள் இருந்து கொண்டே இருக்கின்றது” என்றுள்ளார்