தமிழ்நாடு

“சிஏஏவினால் 130 கோடி மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை” - நடிகர் ராதாரவி

“சிஏஏவினால் 130 கோடி மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை” - நடிகர் ராதாரவி

webteam

குடியுரிமைச் சட்டத்தால் இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என நடிகர் ராதாரவி தெரித்துள்ளார்.

தருமபுரியில் நடைபெற்ற தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர் நலச்சங்கத்தின் மாநாட்டில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாட்டுப்புற கலைஞர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

அதனை நிச்சயமாக இந்தக் கலைஞர்களுக்கு பெற்றுத் தருவேன். குடியுரிமைச் சட்டத்தால் இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. குடியுரிமைச் சட்டத்தை எல்லோரும் ஆதரிக்க வேண்டும். இந்தச் சட்டத்திற்கு கையெழுத்து போடாமல் எதிர்ப்பு தெரிவிப்பது துரோகச்செயல்.

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தற்பொழுது நடக்கின்ற போராட்டம் இந்திய நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக அல்ல. வேறு நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காகவே நடைபெற்று வருகிறது. தற்பொழுது குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 கோடி பேரிடம் எதிர்க்கட்சி கையெழுத்து பெற்றுள்ளதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் அதை விசாரித்தால் ஒருவருக்கும் எதற்காக கையொப்பம் வாங்குகிறார்கள் என்றே தெரியவில்லை.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் கூட, குடியுரிமைச் சட்டத்தால் யாருக்கு பாதிப்பு இருக்கிறது என்று கூறுங்கள் என ஜெயலலிதாவை போலவே சத்தம் போட்டார்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு ஒரு பதிலும் சொல்லாமல் ஓடினார். எடப்பாடி பழனிசாமி நன்றாக செயல்பட்டு வருகிறார். மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். நிச்சயமாக மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவார்” எனத் தெரிவித்தார்.