மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் இன்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு நேரடியாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதிய தலைமுறை தொலைக்காட்சியிடம் நடிகர் சின்னி ஜெயந்த் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவன, “எனக்கொரு நல்ல அண்ணன். எப்போதும் அன்பாக இருப்பார். அவருடன் அதிகமான படங்களில் நடித்துள்ளேன்.
ஜனவரி 1 என்ற திரைப்படம் நடித்துக் கொண்டிருந்தோம். சண்டைக்காட்சி ராப்பகலாக எடுக்கப்பட்டது. நானும் இடையிடையே வருவது போல் காட்சி. மறுநாள் காலையில் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கிரஹப்பிரவேசம். 3 மணிக்கு படப்பிடிப்பு முடிந்தது. இதனை அடுத்து அவரது வீட்டிற்கு சென்றோம். அங்கிருந்த சில வேலைகளைப் பார்த்தோம். அப்போது அவருக்கு ரவி, சுந்தர்ராஜன் என இரு நண்பர்கள் இருந்தார்கள். உறவினர்கள் யாரும் அதிகளவில் வரவில்லை.
4 மணிக்கு ஐயர்கள் வந்தார்கள். பசுமாடு வேண்டும் என கேட்டார்கள். நானும் ரவி, சுந்தர் ராஜனும் மூன்றாவது தெருவிற்கு சென்று மாட்டைப் பிடித்து வந்தோம். இவர் வீட்டின் முனையில் இருந்தார். உடனடியாக மாட்டைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார். அப்படி எங்களுடன் சொந்தக்காரராக இருந்தார்.
அதன் பின் எப்போது பார்த்தாலும் சொல்லிக்கொண்டு இருப்பார். “யோவ் சின்னி என் வீட்டு கிரஹப்பிரவேசத்திற்கு கடைசி வர நீ கூடவே இருந்தயா” என்பார். அதை அனைவரிடமும் சொல்வார். செய்த உதவியை மீண்டும் நினைவு கூர்ந்த ஒருவர் அவர்தான்” என தேரிவித்துள்ளார்.