தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்ட தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
கொரோனா வைரஸின் 2ஆவது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜுன் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஆன்லைன் அல்லது தொலைப்பேசி வாயிலாக மளிகைப் பொருட்களை ஆர்டர் பெற்று அவற்றை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளில் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகனங்கள், தள்ளுவண்டிகளில் காய்கறி, பழங்களுடன் மளிகைப்பொருட்களையும் விற்பனை செய்யலாம். ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் என்றும், இ-காமர்ஸ் நிறுவனங்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.