ஓமலூர் அருகே தும்பிபாடி வட்டாரத்தில் ஸ்மார்ட்போனை கொண்டு டிவியில் பாடம் நடத்தும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அரசுப் பள்ளி ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார்.
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் டேப்லெட் வழங்கப்பட உள்ளது. அதற்கான பயிற்சிகள் வகுப்புகள் கடந்த இரண்டு நாட்களாக ஓமலூரில் நடத்தப்பட்டது. டேப்லெட் வழங்கும் திட்டத்திற்கு முதற்கட்டமாக ஓமலூர் ஒன்றியத்தில் 29 அரசு நடுநிலைப் பள்ளிகளும், காடையாம்பட்டி ஒன்றியத்தில் 25 அரசு நடுநிலைப் பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஓமலூர் வட்டாரத்தில் உள்ள தும்பிபாடி அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் வீரமணி, பள்ளிக் குழந்தைகளுக்கு எளிய முறையில் பாடம் நடத்தும் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளார். இந்த டேப்லெட் பயிற்சியுடன் புதிய தொழில்நுட்ப பயிற்சிகளும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு மென்பொருளை பயன்படுத்தி சிறந்தக் கல்வியை பெறும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஆசிரியர்கள் தாங்கள் வைத்துள்ள ஸ்மார்ட் போனில் உள்ள தீக்சா ஆப்பையும், கல்வித்துறை ஆப்களையும், டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். அந்த ஆப்பை கொண்டு அரசுப் பள்ளிக்கு வழங்கிய டிவியில் சில டிவைஸ்களை இணையத்தை செல்போன் மூலமாகவே குழந்தைகளுக்கு எளிய முறையில் கல்வியை போதிக்க முடியும். இந்த ஆப் மூலம் பாடம் நடத்தும் போது மாணவர்கள் தவறான பதிலை கூறினால், அந்தத் தவறை டிவியில் சுட்டிகாட்டிவிடும். இதன் மூலம் மாணவர்கள் அந்தத் தவறை திருத்தி சரியான பதிலை அவர்களே தெரிந்துகொள்ள முடியும். மேலும், மாணவர்களே பாடங்களை நடத்தி படித்துக்கொள்ள முடியும்.
இந்த எளிய தொழில்நுட்பம் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாணவர்கள் புதிய பாடத்திட்டங்களை மென்பொருள் வாயிலாகவும் கற்றுக்கொள்ள முடிகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இதற்காக பெரிய அளவில் செலவு செய்ய தேவையில்லை என்றும் அரசு வழங்கியுள்ள பொருட்களை கொண்டு மிகமிக குறைந்த செலவில் டிவைஸ்களை வாங்கி பொருத்தினாலே பள்ளியில் உள்ள டிவி மூலம் புதிய கல்வி முறைகளை மாணவர்களுக்கு போதிக்க முடியும் என்று ஆசிரியர் வீரமணி கூறுகிறார்.