2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தனக்கு தொடர்பே இல்லாதது போல முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைதி காத்தது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
2ஜி முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் வழக்கு குறித்த பல்வேறு முக்கிய தகவல்கள் கொண்ட புத்தகத்தை ராசா எழுதியுள்ளார். 20ஆம் தேதி இந்தப் புத்தகம் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் அப்புத்தகத்தில் இருந்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
2ஜி ஏலம் குறித்த முழு விவரங்களையும் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் விரிவாக எடுத்துரைத்ததாகவும் அவரது அனுமதிக்கு பின்பே பணிகளை தொடங்கியதாகவும் ராசா குறிப்பிட்டுள்ளார். பின்னர் இவ்விவகாரத்தில் பிரதமருக்கு அவரது ஆலோசகர்கள் தவறான தகவல்களை அளித்ததுடன் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பிரதமர் அலுவலகத்தை தங்களுக்கு சாதகமாக வளைக்க முயன்றதாக ராசா கூறியுள்ளார்.
2ஜி விவகாரத்தில் தனது செயல்பாடுகள் முற்றிலும் சரியானதாக இருந்த நிலையில் தன்னை ஆதரித்திருக்க வேண்டிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் மன்மோகன் சிங்கும் அமைதி காத்ததாக ராசா கூறியுள்ளார். இது தேசத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியையும் அமைதியாக்கியது போல இருந்ததாகவும் புத்தகத்தில் ஆ.ராசா கூறியுள்ளார்.
2009ம் ஆண்டு தொலைத்தொடர்பு அமைச்சக அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியதை அதே நாளில் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்தபோது, அப்படியா எனக் கூறி தனக்குத் தெரியாது என்று வியப்பு தெரிவித்தார் என்றும் இதை கேட்பவர்களுக்கு இதை நம்புவது சிரமமாக இருக்கும் என்றும் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.