தமிழ்நாடு

சாலையில் பேசிக்கொண்டிருந்த காவலர்..முன்விரோதத்தால் கார் ஏற்றி கொலை செய்த சகோதரியின் கணவர்!

சாலையில் பேசிக்கொண்டிருந்த காவலர்..முன்விரோதத்தால் கார் ஏற்றி கொலை செய்த சகோதரியின் கணவர்!

webteam

முன்விரோதம் காரணமாக சகோதரியின் கணவரே தனது மச்சான் மீது கார் ஏற்றி கொலை சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே வடக்கு செய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் காமேஷ் குமார் (37). இவர், சென்னையில் உள்ள நீலாங்கரை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஒரு வாரமாக காமேஷ் குமாருக்கும், அவர் அக்காவின் கணவர் மதன் பிரபுவிற்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. காலை 11:30 மணி அளவில் காமேஷ் குமார் இருசக்கர வாகனம் பல்சரில் செய்யூரில் அமைந்துள்ள விவசாய நிலத்தை பார்வையிட்டு வீடு திரும்பியபோது, செய்யூர் சால்ட் காலனிக்கு செல்லும் வழியில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையோரத்தில் நின்று கொண்டு நண்பருடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது காமேஷ்குமாரின் சகோதரியின் கணவர் மதன் பிரபு மற்றும் அவரது நண்பர்கள் ஃபோர்ட் ஈகோ ஸ்போர்ட் காரில் செய்யூர் நோக்கி அதிவேகமாக வந்துள்ளனர். பின்னர் சாலையோரம் காமேஷ் குமார் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தைக் கண்ட மதன் பிரபு, தனது மச்சான் என்றும் பாராமல், முதல் நிலை காவலர் காமேஷ் குமார் மீது காரை ஏற்றியுள்ளார்.

மோதிய வேகத்தில் கார் முன்பகுதி சிதலமடைந்து பேட்டரியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டதால் கார் தீப்பற்றி எரிந்தது. அதன்பிறகு அங்கிருந்து தப்பிச்செல்ல மதன் பிரபு முற்பட்டபோது காரை இயக்க முடியாததால், காரை அங்கியே நிறுத்திவிட்டு தனது நண்பர்களுடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சாலையோரம் இருந்த பள்ளி சுவற்றிற்கும், காருக்கும் இடையே சிக்கிய காமேஷ் குமாருக்கு தலையின் பின் புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் தீயை அணைத்து, உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த காவலரின் மனைவி ரேகா, செய்யூர் காவல்நிலையத்தில் தனது கணவர் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார் என புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் காவலர் மீது கார் ஏற்றி கொலை செய்த காவலரின் சகோதரியின் கணவர் மதன் பிரபு மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.