சமூக வளைதளத்தில் பிரதமர் மோடி குறித்து தவறாக பதிவிட்டவரை திருப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர், திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள ஆடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 28ம் தேதி அன்று, பிரதமர் மோடியின் புகைப்படத்தை மார்பிங் செய்து, கிண்டல் செய்யும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன், ‘இந்தப் படத்திற்க்கு என்ன தலைப்பு வைக்கலாம்’ எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவானது பிரதமரை ஆபாசமாக சித்தரிப்பதாகவும், பதிவை அகற்ற வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட பாஜக தலைவர் சின்னசாமி தலைமையில், அம்மாவட்ட வடக்கு காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் தெரிவித்திருந்தனர். மேலும் தனிப்பட்ட வகையில் பிரதமரை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டவரை கைது செய்ய வேண்டும் எனவும் புகாரில் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் முகநூலில் பதிவிட்ட பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது அவதூறு பரப்பிய குற்றத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.