புதுக்கோட்டையில் துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வெளியேறிய குண்டு, சிறுவனொருவனின் தலையில் பலமாக தாக்கியுள்ளது. காயமடைந்த சிறுவன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சிறுவனுக்காக நீதிகேட்டு ஊர் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைப்பட்டியில் காவல்துறைக்கு சொந்தமான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் உள்ளது. அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பயிற்சி மையத்திலிருந்து வெளியேறும் துப்பாக்கிக் குண்டுகள் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பசுமலைப்பட்டி கிராமத்தில் அவ்வப்போது விழும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கொத்தமங்கலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் புகழேந்தி, அரையாண்டு விடுமுறைக்காக பசுமலைப்பட்டியில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
இன்று வீட்டில் சிறுவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, வீட்டின் கூரையை துளைத்த குண்டு சிறுவனின் தலையில் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் துப்பாக்கிக் குண்டு சிறுவனின் மூளைக்குள் சென்று பக்கவாட்டில் இருப்பதாகக் கூறி, அறுவை சிகிச்சை மூலம் குண்டை அகற்ற தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தஞ்சை அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தால் கிராமத்தில் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, உயர்மட்டக் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் செயல்பட தற்காலிகமாக அவர் தடை விதித்துள்ளார். கீரனூர் டிஎஸ்பி சிவசுப்பிரமணியன் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைய செய்தி: ”வரவேண்டிய நேரத்தில் வருவார் ராஜேந்திர பாலாஜி”- முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் பேட்டி