தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு பாவூர்சத்திரம் வழியாக சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த இடத்தை பேருந்து கடந்த போது பேருந்தின் பின்பக்க படிக்கட்டு, சாலையோரம் இருந்த தடுப்பில் இடித்து சேதமடைந்ததாக தெரிகிறது. இதனால் அந்த பின்பக்க வழியில் பயணிகள் ஏறவோ இறங்கவோ முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். இரவு நேரத்தில் ஏற்பட்ட இச்சம்பவத்தால் ஆலங்குளம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் மாற்று பேருந்துகள் இல்லாததால், நீண்ட நேரம் பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தின் முன் பகுதியில் காத்திருந்தனர். பெண்கள் மற்றும் கை குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் நீண்ட நேரம் பேருந்து நிலையத்திலேயே பயணிகள் கொசுக்கடியில் காத்திருந்தனர். இது குறித்து தென்காசி பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னர் வந்த மாற்று பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி சென்றது.
இச்சம்பவம் குறித்து மண்டல மேலாளர் சன்முகத்திடம் கேட்ட போது, நெல்லை-தென்காசி இணைக்கும் சாலையில் சாலைபணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் பாவூர்சத்திரம் பாலம் அருகே உள்ள இடத்தில் பள்ளம் மேடு அதிகமாக காணப்படுகிறது. அந்த பகுதி வழியே பேருந்து வேகமாக செல்லும் போது மேட்டுப்பகுதியில் மோதியதில் படி உடைந்துள்ளது. உடனடியாக மாற்று பேரூந்து மூலம் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.
அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்ததால் பயணிகள் பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் முன்பு காத்துக் கிடந்தாலும், மதுப்பிரியர் செய்த அட்ராசிட்டி அங்கிருந்தவர்களை கலகலப்பில் ஆழ்த்தியது. உடைந்த படிக்கட்டை தன்னிடம் இருந்த துண்டை வைத்து சரிசெய்ய முயன்ற மதுபிரியர், பின்னர் உடைந்த படிகட்டின் இருபுறமும் துண்டால் கட்டிவைத்து அட்ராசிட்டி செய்தார்.