தமிழ்நாடு

கம்பம் அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்ட தொழிலதிபர் பெரியகுளம் அருகே பத்திரமாக மீட்பு

கம்பம் அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்ட தொழிலதிபர் பெரியகுளம் அருகே பத்திரமாக மீட்பு

webteam

கம்பம் அருகே மர்ம நபர்களால் தொழிலதிபர் கடத்தப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ராயப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அதிசயம். இவர் கோழி பண்ணை மற்றும் திராட்சை தோட்டங்கள் வைத்துள்ளார். இவரது பண்ணை மற்றும் தோட்டங்களில் இருந்து கோழிகள் மற்றும் திராட்சை பழங்களை தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிற்கு விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர், தனது தோட்டத்திற்குச் செல்லும் சண்முகநாதன் கோவில் சாலையில் நேற்று அதிகாலை நடை பயிற்சிக்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே கார் ஒன்று வந்துள்ளது. இதையடுத்து திடீரென அந்த காரில் இருந்து இறங்கிய நபர்கள் அதிரடியாக அதிசயத்தை தாக்கி காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

அப்பகுதியில் இருந்த விவசாய வேலைக்குச் சென்ற விவசாயிகள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு உடனடியாக அதிசயம் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை தொடர்ந்து அவரது மருமகன் ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தார் ராயப்பன்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பெரியகுளம் அருகே தொழிலதிபரை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து உத்தமபாளையம் இணை போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையிலான காவல்துறையினர் கடத்தல்காரர்கள் குறித்தும் இவர் கடத்தப்பட்டதற்கான காரணங்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.