சென்னை சோழிங்கநல்லூரில் ரத்தம் வழிந்தபடி சாலையில் அமர்ந்திருந்த நபரை மருத்துவமனையில் சேர்த்த தலைமைக் காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
சோழிங்கநல்லூர் காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள எல்.பி.ஜி. எரிவாயு நிரப்பும் மையத்துக்கு ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதிலிருந்த பயணிக்கும் ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் பயணியை ஆட்டோவில் இருந்து இறங்கும்படி ஓட்டுநர் கூறியதாக கூறப்படுகிறது. அவர் இறங்கியபின் பெட்ரோல் நிலையத்தில் இருந்த இரும்பு உருளையால் தாக்கிவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த பயணி ரத்தம் வழிய சாலையில் அமர்ந்திருந்தார். அவ்வழியே சென்ற யாரும் அவருக்கு உதவாத நிலையில், அந்த நபரைக் கண்ட போக்குவரத்து தலைமைக் காவலர் பிரகாஷ் என்பவர் மனித நேயத்துடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதனால் தலைமைக் காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.