தமிழ்நாடு

பருவமழை பாதிப்புகளை சரிசெய்ய தயார் நிலையில் 9 பேரிடர் மீட்பு குழுக்கள்..!

பருவமழை பாதிப்புகளை சரிசெய்ய தயார் நிலையில் 9 பேரிடர் மீட்பு குழுக்கள்..!

Rasus

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய 9 மீட்பு குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மீட்புப் படை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்த நிலையில் நேற்று இரவும் இடியுடன் விடிய விடிய மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே சிட்லபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். மேலும் சாலைகளிலும் வெள்ளம் போல மழை நீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய 9 மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. அரக்கோணம், சென்னை முகாம்களில் ஒரு குழுவிற்கு 45 வீரர்கள் என்ற நிலையில் குழு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை பாதிப்பு குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.