75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கரூரில் பேக்கரி ஒன்றில் 10 கிலோ எடை கொண்ட தேசியக் கொடியின் மூவர்ண கலரில் தயாரிக்கப்பட்ட கேக்கை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை கொண்டாடும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இந்நிலையில், கரூர் வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள பேக்கரி ஒன்றில், வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 'தேசத்தை நேசிப்போம்' என்ற வாசகமும் 'இந்தியனாக இருக்க பெருமைப்படுகிறேன்' என்ற ஆங்கில வாசகமும் பொறிக்கப்பட்ட 10 கிலோ அளவிலான பிரத்யேக கேக் ஒன்றை அதன் உரிமையாளர் வடிவமைத்துள்ளார்.
இந்த கேக்கில் மூவர்ணக் கொடியை அடையாளப்படுத்தும் வகையில் இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டிய புகைப்படம், டெல்லியில் அமைந்துள்ள இந்தியா கேட் மற்றும் ஆக்ராவில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் படித்த திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தன.
மேலும், மூவர்ண வடிவிலான இனிப்பு லட்டுகளும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. 10 கிலோ எடையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு வடிவமைக்கப்பட்டுள்ள அந்த கேக்கை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.