அதிமுக தலைமை அலுவலக கலவரச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல அ.தி.மு.க-வினர் மீது ராயப்பேட்டை போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் கடந்த மாதம் 11 ஆம் தேதி வானகரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதன் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அதிமுக அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ.பன்னீர் செல்வம் அதிமுக அலுவலகத்தில் இருந்து கட்சி நிதி, வங்கி ஆவணங்கள், சி.பி.யு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி சண்முகம் கடந்த மாதம் 23 ஆம் தேதி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அதிமுக அலுவலகத்தை சூறையாடியதுடன் பொது சொத்துக்களை சேதப்படுத்திய ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சி.வி.சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் ஓ.பன்னீர் செல்வம், வைத்திய லிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலர் மீது ராயப்பேட்டை போலீசார் கொலை மிரட்டல், கலகம் செய்தல், பொது சொத்தை சேதப்படுத்துதல், நம்பிக்கை மோசடி, சொத்துக்களை திருடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராயப்பேட்டை அதிமுக அலுவலக கலவரச் சம்பவம், அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த அனைத்து வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.