தமிழ்நாடு

64 வயது காது கேளாத வேன் ஓட்டுநரால் விபத்து - 2ம் வகுப்பு சிறுவன் மரணத்தில் நடந்தது என்ன?

64 வயது காது கேளாத வேன் ஓட்டுநரால் விபத்து - 2ம் வகுப்பு சிறுவன் மரணத்தில் நடந்தது என்ன?

Sinekadhara

பள்ளி வேன் மோதி 2-ஆம் வகுப்பு மாணவன் பலியானது எப்படி? காது கேட்காத 64 வயதுடைய ஓட்டுநரை பள்ளி நிர்வாகம் பணிக்கு அமர்த்தியது ஏன்? நடந்தது என்ன?

சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெனிபர். சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு தீக்சித் (7) என்ற மகன் இருந்தார். வளசரவாக்கத்தை அடுத்த ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம்போல் மாணவன் தீக்சித், பள்ளி வேனிலேயே சென்றார். பள்ளி வேன் பள்ளி வளாகத்திற்குள் சென்று, வகுப்பறைகள் இருக்கும் இடம் அருகில் நிறுத்தப்பட்டபோது மாணவர்கள் இறங்கியிருக்கின்றனர்.

அப்போது மாணவன் தீக்சித்தும் இறங்கி நடந்து சென்றபோது வேனின் பின்பகுதியில் நின்றிருந்தபோது வேனை ஓட்டுநர் இயக்கியிருக்கிறார்ர். வலதுபுறம் உள்ள பார்க்கிங் பகுதியில் வேனை நிறுத்துவதற்காக திரும்பியபோது வேன் பின்புறம் நின்றிருந்த மாணவன் தீக்சித் மீது ஏறியது. சம்பவ இடத்திலேயே அவர் படுகாயம் அடைந்தார். உடனே அங்கிருந்த பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் மருத்துவமனைக்கு தீக்சித்தை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவன் தீக்சித் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பபட்டது.

இது தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பள்ளி வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை வளசரவாக்கம் போலீசார் கைதுசெய்து காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து விசாரணை நடத்தினர். உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து தி.நகர் காவல்துறை துணை ஆணையர் (பொறுப்பு) மீனா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். விபத்து நடந்து இடத்தையும் ஆய்வு செய்தார். பள்ளியில் இருந்த நிர்வாகிகள், ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தார். சிசிடிவி காட்சியை போலீசார் கைப்பற்றினர்.

தடயவியல் துறை உதவி இயக்குநர் சைபா தலைமையிலான நிபுணர்கள் பள்ளிக்கு நேரில் வந்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளி மாணவர்களை இறக்கிவிடும் பணி செய்துவரும் பெண் ஊழியர் ஞானசக்தி என்பவரும் விபத்து நிகழ்ந்தபோது அங்கு இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. அவரையும் போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.

மேலும் பள்ளி தாளாளர் ஜெய சுபாஷ், பள்ளி முதல்வர் தனலட்சுமி ஆகியோர் மீது வளசரவாக்கம் போலீசார் இந்திய தண்டனை சட்டப்பிரிவான 304(2)- கொலையாகாத மரணத்தை விளைவித்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நடத்திய விசாரணையில் பள்ளிக்கு 3 வேன்கள் இயங்கி வருகிறது. இதில் கைதான வேன் ஓட்டுனர் பூங்காவனம் சுமார் 8 ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது. 64 வயதான பூங்காவனத்திற்கு ஒரு காது சரியாக கேட்காது என்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சியில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வுபெற்று தற்போது இந்த பள்ளியில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பள்ளி மாணவன் தீக்சித் வேன் பின்பு நின்று இருப்பதாக கண்டு சக மாணவர்கள் சத்தம் போட்டுள்ளனர். ஆனால் காது கேட்காத ஓட்டுநர் பூங்காவனம் வேனை இயக்கியபோது விபத்தில் மாணவன் தீக்சித் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தை அறிந்து விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பிரபாகர் ராஜா, கவுன்சிலர் கண்ணன் பள்ளிக்கு வந்துள்ளனர். விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். பள்ளிக்குள்ளேயே வேன் மோதி மாணவன் பலியான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வேன்களுக்காக பல்வேறு கட்டுப்பாடுகள், பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்கும் படி உத்தரவிட்டும்கூட முறையாக கடைபிடிக்காததாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பள்ளி மாணவன் தீக்சித் வேனில் இருந்து இறங்கி சென்றதைக்கூட பள்ளி வேன் ஓட்டுநரும், பெண் ஊழியரும்கூட பார்க்கவில்லை என்பதே அதிர்ச்சி அளிக்கும் தகவலாக இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.