சென்னை வியாசர்பாடி அருகே லாரி மோதிய விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விபத்து ஏற்படுத்திய லாரியை தீயிட்டு கொளுத்தினர்.
சென்னை வியாசர்பாடி மேகசின்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரேம் குமார். இவர் தனது மனைவி மற்றும் 5 வயது குழந்தை பிரியதர்ஷினியுடன் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும் போது, பின்னால் வந்த லாரி மோதியதில் மூவரும் கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில், விபத்து நடந்த இடத்திலேயே சிறுமி பிரியதர்ஷினி தலையில் அடிபட்டு இறந்தார்.படுகாயமைடைந்த பிரேம் குமார் மற்றும் அவரது மனைவி மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய லாரிக்கு தீ வைத்தனர். இதில் லாரியின் முன் பகுதி முழுவதும் கருகியது. இதனையடுத்து சம்பவ இடதிற்கு வந்த காவல் துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்து, தீயை அணைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி எலிபெண்ட் கேட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வியாசர்பாடி மேகசின்புரம் பகுதியில் இருந்த வேகத்தடையை நீக்கிய பிறகு தான் இத்தகைய விபத்து அதிகமாக நடப்பதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் கனரக வாங்கனங்களை இரவு 11 மணிக்கு முன்னதாக இயக்குவதற்கு தடை விதிக்கவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.