5 பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண் pt desk
தமிழ்நாடு

சென்னை திமுக பிரமுகர் ஆராவமுதன் கொலை வழக்கு - சிறுவன் உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை திமுக ஒன்றிய செயலாளர் ஆராவமுதன் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 5 பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

webteam

செய்தியாளர்: டி.சாம்ராஜ்

சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள காட்டாங்குளத்தூர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஆராவமுதன். இவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை கவனிப்பதற்காக சில தினங்களுக்கு முன் வண்டலூர் மேம்பாலம் அருகில் படப்பை செல்லும் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதிவேகமாக காரில் வந்த சில நபர்கள் இவரது காரை வழிமறித்து நாட்டு வெடிகுண்டு வீசி, காரில் இருந்த ஆராவமுதனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த கொலை தொடர்பாக நான்கு தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், வண்டலூர் முனீஸ்வரன் (22), மண்ணிவாக்கம் சத்தியசீலன் (20), திருப்பூர் மாவட்டம் ராக்கிபாளையம் சம்பத்குமார் (20), மணிகண்டன் (20) மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர்.

5 பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண்

இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த நீதிபதி உமாதேவி, முனீஸ்வரன், சத்தியசீலன், சம்பத்குமார், மணிகண்டன் ஆகிய நான்கு பேரையும் கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் மார்ச் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கவும், 17 வயது சிறுவனை செங்கல்பட்டிற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.