முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவதால், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இத்தொகுதியில் 4 முறை வெற்றியை ருசித்தவர் எடப்பாடி பழனிசாமி. இந்தத் தேர்தலில் இங்கு 85 சதவிகிதத்திற்கும் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது.
நடப்பு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில், 85 புள்ளி 64 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இத்தேர்தலில், அதிமுக சார்பில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி, திமுக சார்பில் சம்பத்குமார், அமமுக சார்பில் பூக்கடை சேகர், மக்கள் நீதி மய்யம் சார்பில் தாசப்பராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீரத்னா ஆகியோர் போட்டியிட்டனர்.
எடப்பாடியில் இதுவரை நடந்த 13 தேர்தல்களில் அதிமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 3 முறையும், காங்கிரஸ் - திமுக ஆகிய கட்சிகள் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி இந்தத் தொகுதியில் இதுவரை 6 தேர்தல்களில் போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றுள்ளார்.
1989 ஆம் ஆண்டு அதிமுக இரண்டாக உடைந்தபோது ஜெயலலிதா அணியின் சார்பில் சேவல் சின்னத்தில் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991, 2011, 2016 ஆகிய தேர்தல்களிலும் வெற்றியை ருசித்த எடப்பாடி பழனிசாமி, 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் தோல்வியைத் தழுவினார்.
1998 முதல் 1999 வரை, திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி, 2011ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பெற்றார். 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை அமைச்சரானார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் முதலமைச்சரானார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், இத்தொகுதியில் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். தற்போது ஆறாவது முறையாக அவர் போட்டியிடும் எடப்பாடி தொகுதி, முதல்வர் வேட்பாளரின் தொகுதி என்ற அந்தஸ்தை முதல்முறையாகப் பெற்று கவனம் ஈர்த்துள்ளது. இத்தொகுதியில் இந்த முறையும் வெற்றிபெற்றால், எடப்பாடி பழனிசாமிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக இருக்கும்.