மதுரையில் மகளிர் கல்லூரியில் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்ட நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
மதுரை மாநகர் நரிமேடு பகுதியில் உள்ள லேடி டோக் கல்லூரி வளாகத்திற்குள், கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி தினத்தன்று, இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்துடன் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்தும், கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் வெளியே நடந்து வந்தபோது அத்துமீறலில் ஈடுபட முயன்றதோடு, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாவலர் பூமி என்பவரை தாக்கியும், இரு சக்கர வாகனத்தினை அவர் மீது ஏற்ற முயன்றும் கல்லூரி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியும், அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். இதனை வீடியாவாக பதிவுசெய்து சமூகவலைதளங்களிலும் பதிவிட்டனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இதனையடுத்து கல்லூரி கண்காணிப்பாளரான பூப்பாண்டி என்பவர் தல்லாகுளம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய வழக்கில் திருப்புவனத்தை சேர்ந்த சூரியா, முத்துநவேஷ், கோ.புதூரை சேர்ந்த அருண்பாண்டியன், மணிகண்டன், சேதுபாண்டி, பா.மணிகண்டன், ஆத்திகுளம் முத்து விக்னேஷ், காந்திபுரம், வில்லியம் பிரான்சிஸ், காந்திபுரம் விமல்ஜாய் பேட்ரிக், மது நவீஸ் ஆகிய 10 இளைஞர்களை தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து சம்மந்தப்பட்ட மகளிர் கல்லூரி முன்பு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மகளிர் கல்லூரி வளாகத்தில் இருசக்கர வாகனங்களில் அத்துமீறி நுழைந்து, வாகனங்களை அதிவேகமாகவும், அபாயகரமாகவும் இயக்கி, கல்லூரியின் காவலாளியை மிரட்டி, தாக்கி, கல்லுாரி மாணவிகளை அச்சுறுத்தும் விதமாகவும், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்ட 10 பேரில் திருப்புவனத்தை சேர்ந்த சூர்யா, மது நவீஸ் கே.புதூரை சேர்ந்த அருண், அருண்பாண்டியன், ஆகிய நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர் காவல் ஆணையர் செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.