செய்தியாளர்: ஆர்.மோகன்
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கொட்டாரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது குழந்தைகள் அனுஷ்கா (3) மற்றும் பாலமித்திரன் (2). மணிகண்டனின் தங்கை அறிவழகியின் மகள்கள் லாவண்யா (5), ராஷ்மிதா (2).
இந்த நான்கு குழந்தைகளும் நேற்று வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை, டூத் பேஸ்ட் என நினைத்து வாயில் வைத்து விளையாண்டுள்ளனர். நல்வாய்ப்பாக அதை உடனடியாக பார்த்த குடும்பத்தினர், அவர்களை அருகிலுள்ள விருதாச்சலம் அரச மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது குழந்தைகள் நால்வரும் நல்ல நிலையில் இருந்தாலும்கூட தொடர்ந்து மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவிலேயே சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் மற்றும் ஆலடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் வீட்டிலிருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.