தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், போட்டியிட்ட தொகுதிகள் மற்றும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை குறித்து இதில் பார்க்கலாம்.
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவும், திமுகவும் கணிசமான வாக்கு சதவீதத்தை கொண்டுள்ள பிரதான கட்சிகள். 1991 முதல் 2016 வரை ஆறு சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக 2016 தவிர ஐந்து முறையும், திமுக எல்லா தேர்தல்களிலும் கூட்டணி அமைத்துதான் களம் கண்டுள்ளன. 1991 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 168 தொகுதிகளில் போட்டியிட்டு 164 இடங்களில் வென்றது. திமுக 172 இடங்களில் போட்டியிட்டு வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதற்கு நேர்மாறாக 1996 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இருந்தன. அதிமுக 168 இடங்களில் களம் கண்டு வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுக 182 தொகுதிகளில் போட்டியிட்டு 173 இடங்களில் வெற்றி வாகை சூடியது. 2001 சட்டமன்ற தேர்தலில் 141 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 132 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், 183 இடங்களில் களம் கண்ட திமுகவால் 31 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 188 தொகுதிகளில் போட்டியிட்டு 61 இடங்களில் வென்றது. திமுக 132 இடங்களில் 96ஐ கைப்பற்றியது. 2011ஆம் ஆண்டு அதிமுக 150 இடங்களிலும், திமுக 23 இடங்களிலும் வெற்றி பெற்றன. 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமைக்காமல் தனித்து களம் கண்டது. அதில் 135 இடங்களை கைப்பற்றியது. திமுக 180 இடங்களில் போட்டியிட்டு 88 இடங்களில் வெற்றி பெற்றது.