காஞ்சிபுரம் வளத்தோட்டம் பாலாற்று பகுதியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுமிகள் நீரில் மூழ்கி மாயமான நிலையில் இன்று இரண்டு சிறுமிகளின் உடல் கரை ஒதுங்கியது.
காஞ்சிபுரம் தும்பவனம் பகுதியைச் சேர்ந்த பூர்ணிமா, சுபஸ்ஸ்ரீ, ஜெயஸ்ஸ்ரீ ஆகிய மூன்று சிறுமிகள் தங்களது உறவினர் தாமோதரன் என்பவருடன் காஞ்சிபுரம் ஓரிக்கை பாலாற்றில் வெள்ளநீர் செல்வதை பார்க்கவும் குளிக்கவும் சென்றிருந்தனர்.
இந்நிலையில் வாளத்தோட்டம் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சிறுமிகள் மூவரும் ஆற்றுநீரில் திடீரென மாயமானார்கள். இதுகுறித்து தாமோதரன் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து ஆற்றில் மாயமான சிறுமிகளை தேடும் பணியை மேற்கொண்டனர்.
இரவு நேரமானதால் தேடும் பணியை நிறுத்திய நிலையில் இன்று காலை ஜெயஸ்ரீ, பூர்ணிமா ஆகிய 2 சிறுமிகளின் உடல் குருவி மலைப்பகுதியில் கரை ஒதுங்கியது. தகவலறிந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் ஓரு சிறுமி உடலை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இதையடுத்து மீட்பு பணி நடைபெறும் இடத்தில் காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.